சட்டசபை தேர்தலில் போட்டியிட 2 இடங்கள் கேட்போம்.. கருணாஸ் எம்.எல்.ஏ.

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்கள் முதல்வரிடம் கேட்கப்படும் என்று கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

சென்னை, ஜன-3

சென்னை நந்தனம் தேவர் சிலையில் இருந்து பசும்பொன் வரை ‘தேசிய தெய்வீக யாத்திரை’ நடத்த திருவாடானை எம்எல்ஏ நடிகர் கருணாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நேற்று துளசி மாலை அணிந்து சிறப்பு வழிபாடு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும், கள்ளர், மறவர், அகமுடையார் சமூகங்களை ஒன்றிணைத்து தேவர் என்று அரசாணை வெளியிட வேண்டும். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மருதுபாண்டியர்களின் சிலை அமைக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அக். 30-ல் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா அன்று அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓரிரு வாரங்களில் முதல்வரின் ஒப்புதலைப் பெற்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையில் இருந்து பசும்பொன் வரை ‘தேசிய தெய்வீக யாத்திரை’ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்கள் முதல்வரிடம் கேட்கப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எங்களிடம் ஆதரவு கேட்டது. நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இருந்ததால் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பாஜகவில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *