என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவதா?.. ஸ்டாலினுக்கு S.P.வேலுமணி கண்டனம்

என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நடந்து கொண்டால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை, ஜன-3

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அப்போது, கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள் என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து, மைல்கல் என பெண் கூறினார். இதையடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார்.

அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த பெண், தி.மு.க. எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்? என கோஷம் எழுப்பியபடியே வெளியேறினார். வெளியில் இருந்த தி.மு.க.வினர், அந்த பெண்ணையும், போலீசாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளில் தி.மு.க.வினர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதன்பின் பேசிய ஸ்டாலின், தி.மு.க. கட்டுப்பாடு உள்ள இயக்கம். அந்த பெண்ணை கண்டுபிடித்து எந்த பிரச்சினையும் இல்லாமல் அனுப்பி வைத்துதோம். வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல, முதல்வரே கூட்டம் நடத்த முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில், என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நடந்து கொண்டால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *