பதவி கொடுத்த காங்கிரசில் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது.. சொந்த கட்சிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் கருத்து

தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

சென்னை, ஜன-2

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்கு 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள், 32 மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதுதவிர மாநிலத் தேர்தல் குழுவுக்கு 34 பேரும், தேர்தல் ஒருங்கிணைப்புக் கமிட்டிக்கு 19 பேரும், தேர்தல் பரப்புரை கமிட்டிக்கு 38 பேரும், விளம்பரக் கமிட்டிக்கு 31 பேரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் கமிட்டிக்கு 24 பேரும், ஊடக ஒருங்கிணைப்புக் கமிட்டிக்கு16 பேரும், தேர்தல் நிர்வாகக் கமிட்டிக்கு 6 பேரும் இன்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் தேர்தல் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருக்கும் இந்த மெகா பொறுப்பாளர் பட்டியல் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம் ‘இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்தப் பயனும் இல்லை. 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ள யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தலைமை வெளியிட்டுள்ள பொறுப்பாளர்கள் பட்டியலை விமர்சிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *