தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி..!

தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

சென்னை, ஜன-2

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். குறிப்பாக, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் 240 கோடிக்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார இழப்பை அரசு சந்தித்தது. இதையடுத்து, மே மாதம் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்ய கடைகளில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, 2021 புத்தாண்டிற்கு 620 கோடி மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்தது. இதற்காக கடைகளில் கூடுதல் மதுபானங்களை ஊழியர்கள் இருப்பு செய்தனர். இந்தநிலையில், நேற்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை (டிச.31ம் தேதி) டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் மதுவிற்பனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமலும், சானிடைசர் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளி இன்றியும் மதுவிற்பனை நடைபெற்றது.

ஆனால் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதாலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாகவும் இந்த புத்தாண்டில் மது விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஊழியர்கள் கூறினர்.

புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த புத்தாண்டின் (2020) போது டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.181 கோடியே 90 லட்சத்துக்கும், புத்தாண்டு தினமான 1-ந் தேதி அன்று ரூ.133 கோடியே 50 லட்சத்துக்கும் என 2 நாட்களில் ரூ.315 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது.

இந்த புத்தாண்டு (2021) டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.159 கோடி, 1-ந் தேதி ரூ.138 கோடியே 80 லட்சம் என 2 நாட்களில் ரூ.297 கோடியே 80 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.17 கோடியே 60 லட்சம் குறைவாகும். இதில், 31-ந் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.48 கோடியே 75 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.28 கோடியே 10 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடியே 30 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.26 கோடியே 49 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.28 கோடியே 40 லட்சம் விற்பனையானது.

1-ந் தேதி (நேற்று) சென்னை மண்டலத்தில் ரூ.39 கோடியே 55 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.25 கோடியே 20 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.23 கோடியே 65 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.24 கோடியே 19 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.26 கோடியே 22 லட்சம் விற்பனை நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *