இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற உயர்கல்வி செயலாளரை உடனே மாற்ற வேண்டும்.. ராமதாஸ்
இட ஒதுக்கீட்டை சிதைக்க முயற்சிக்கும் உயர்கல்வி செயலாளரை உடனே மாற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை, ஜன-2

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்றதற்காக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
அபூர்வா புகுத்த முயன்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் இந்த சதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பா.ம.க. இந்த நடவடிக்கையை வரவேற்கிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள 54ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை 8-ந்தேதி வெளியிடப்பட்டது. தமிழக அரசு பல்கலை.களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓரு அலகாக கருதப்பட்டு, அதற்குள் 69 சதவீத இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆள் தேர்வு அறிவிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓரு அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தான் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கு ஆணை பிறப்பித்திருந்தார். இது தவறு. சமூகநீதியை சீரழிக்கும் செயல் என நான் கண்டித்தேன்.
உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா யாருடனும், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், சமூகநீதி சார்ந்த அரசின் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றால், அது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் செயல் ஆகும். இது உயர்நீதிமன்றம் கூறியிருப்பதைப் போன்று சட்டத்தையும், விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் மதிக்காத போக்கு ஆகும். இத்தகையவர்கள் உயர்கல்வி செயலராக நீடிக்கக் கூடாது என்பது சரியே.
எனவே, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு சமூகநீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதிகாரி அபூர்வாவை உயர்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து அரசு நீக்க வேண்டும். சமூகநீதிக்கு எதிரான அந்த அதிகாரியை தமிழ்நாட்டில் எங்கும் பணியமர்த்தாமல் மத்தியப் பணிக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தும்போது, ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதும் நடைமுறையே தொடரும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.