கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண்.. அடித்து துரத்திய திமுகவினர்..!
கோவை, ஜன-2

கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் ஊராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின் “வரும் 4 மாதங்களில் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றார்.
இதைடுத்து, கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் “கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள்” என ஸ்டாலினிடம் கேட்டார். அப்போது, நீங்கள் எந்த ஊர் என அவர் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என பெண் கூறினார். இதைடுத்து, அது எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டார்.
அப்போது, ஆவேசமடைந்த அந்தப் பெண் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை சுகுணா புரம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பூங்கொடி( 40) எனத் தெரிய வந்தது. அவருடன் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மீது திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரையும் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டாமுத்தூரில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் செல்லும் வழியில் அதிமுகவினர் சாலை மறியலுக்கு முயன்றனர்.
இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின் ’’இந்த ஒரு கூட்டத்தை தடுக்க நினைத்தால், தமிழகத்தி அதிமுகவினர் எங்கும் கூட்டம் நடத்த முடியாது. உங்கள் முதல்வரை எங்கும் கூட்டம் நடத்த விட மாட்டோம். எங்களை பற்றி உங்களுக்கு தெரியும்’’ என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.