குழந்தை சுஜித் மீட்பு பணியில் இறுதி முடிவு எடுக்கும் தருணம்: விஜயபாஸ்கர்

திருச்சி அக்டோபர்.28

குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கையில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்கான நடவடிக்கை நான்காவது நாளாக தொடர்கிறது,

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழவினர்,தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் என்.எல்.சி. ஓ.என்.ஜி.சி என பல்வேறு குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவை பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கையில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

ரிக் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது. இயந்திரத்தால் திட்டமிட்டபடி பள்ளம் தோண்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் கடினமாக இருக்கின்றன. இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் கடினமாக உள்ளன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை.

கடினமான பாறைகளை உடைக்க ரிக் இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் ட்ரில்லிங் பிளேடு சென்னையில் இருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்தடையும். கணித்தபடி இரண்டு ரிக் இயந்திரங்களாலேயே முழுமையாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இனி இந்த இயந்திரத்தை வைத்து மேலும் தோண்ட முடியுமா என தெரியவில்லை. 

விரைவில் மாற்று வழி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். குழந்தை சுஜித்திடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *