சென்னையில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமிழந்தது.

சென்னை, ஜன-1

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது அட்டகாசமாகவே அரங்கேறும். மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகளில் மக்கள் குவிந்து நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ என ஒருசேர எழுப்பும் குரல், ஒட்டுமொத்த நகரையே உற்சாகத்தில் மிதக்க செய்யும்.. இதுதவிர நிகழ்த்தப்படும் வாணவேடிக்கைகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டையொட்டி, நள்ளிரவு சிறப்பு விருந்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். நடனமாடியும், மது உள்பட விரும்பிய உணவுகளை சாப்பிட்டு உற்சாகமாக மக்கள் புத்தாண்டை வரவேற்பார்கள். இதுதவிர சாலைகள், மேம்பாலங்கள், தெருமுனைகள், குடியிருப்பு வளாகங்கள் என பல்வேறு இடங்களில் ‘கேக்’ வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இப்படி கொண்டாட்டங்களுக்கும், மகிழ்ச்சிக்கும், ஆர்ப்பரிப்புமிக்க ஆனந்தத்துக்கும், குதூகலமான மகிழ்ச்சிக்கும் இந்தமுறை இடம்தராமல் கொரோனா பறித்துவிட்டது என்றே சொல்லலாம். ஆம், இந்தமுறை உற்சாகமில்லா புத்தாண்டாகவே, 2021-ம் ஆண்டு பிறந்தது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. ‘உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம்போல செயல்படும் என்றாலும் 31-ந்தேதி இரவு (நேற்று) புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியில்லை. இரவு 10 மணிக்கு மேல் ஓட்டல்கள், விடுதிகள் மூடப்பட வேண்டும். கடற்கரைகள் மற்றும் சாலைகளிலும் கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது. கடற்கரைகளில் பொதுமக்கள் நுழைய அனுமதியில்லை’, என்றும் அரசு வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி அரசின் உத்தரவுகள் நேற்று இரவு அமல்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இரவு 10 மணிக்கு ஓட்டல்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்துமே மூடப்பட்டன. மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் கடற்கரையை தொடும் அனைத்து முக்கிய சாலைகளும், சர்வீஸ் சாலைக்கு செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன.

அதேவேளை ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் நடைபெறும் இடங்கள் அனைத்தும் வழக்கம்போலவே செயல்பட்டன. அதேபோல தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. சாந்தோம் தேவாலயத்தில் சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதாலும், வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியதாலும் நகர் முழுவதும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் முழு ஊரடங்கை மீண்டும் நினைவூட்டியது போல மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *