என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக நிரூபித்தால் பதவி விலகத் தயார்.. S.P.வேலுமணி அதிரடி

திமுகவினர் என் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கோவை, ஜன-1

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம்கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பயன்பெறுவர். பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதை திமுக தலைவர் ஸ்டாலின் தடுக்க முயற்சித்தாலும், அதை முறியடித்து, மக்களுக்கு வழங்குவோம்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் விதிகளுக்கு உட்பட்டு திமுக தலைவர் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரும் 3-ம் தேதி அதிமுக சார்பில் நடக்கும் கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பேச்சாளர் விந்தியா ஆகியோர், ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் கூறுவர். என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுகவினர் நிரூபித்தால், பதவி விலகத் தயாராக உள்ளேன். அதேபோல, மு.க.ஸ்டாலின் பதவி விலகத் தயாரா?

எனது பதவி உள்ளவரை, கோவை மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்துகொண்டேதான் இருப்பேன். அவதூறு பரப்புவது, பொய் பிரச்சாரம் செய்வதை திமுகவினர் தவிர்த்துவிட்டு, மக்களுக்கு நன்மை செய்ய முன்வர வேண்டும். அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கே.பழனிசாமிதான்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே, கோவை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை சார்பில், பொள்ளாச்சி அடுத்த நல்லிக்கவுண்டன்பாளையம், ராசக்காபாளையம் கிராமங்களில் ‘அம்மா மினி கிளினிக்குகள்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவற்றைத் திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்த விழாவில், சட்டப்பேரவைத் துணை தலைவர் வி.ஜெயராமன், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *