பிறந்தது புத்தாண்டு..! ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை, ஜன-1, 2021

ஆங்கிலப் புத்தாண்டு இனிதே 2021-இல் அடியெடுத்து வைத்துள்ளது. 2020-ஐ யாராலும் மறக்க முடியாத அளவுக்கு கொரோனா தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் முற்றிலுமாகத் தீர்வு காணாத போதிலும் புதிய நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் இந்த 2021 பிறந்துள்ளது.

கொரோனா இல்லா, துயரங்கள் இல்லா, ஏற்றத்தாழ்வுகள் இல்லா, பாகுபாடுகள் இல்லா, வெறுப்புணர்வு இல்லா அனைவரையும் அரவணைக்கும் வகையில் புத்தாண்டு அமையட்டும்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வளமான ஆரோக்கியம் நிறைந்த இந்தியாவையும் தமிழகத்தையும் கட்டியெழுப்ப உறுதியேற்போம். ஒவ்வொருவரின்வாழ்விலும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வர வாழ்த்துகிறேன். அன்பு, சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளை நம் உள்ளத்திலேயே நிலைபெறச் செய்திடவும், அமைதி, நல்லிணக்கம் உள்ளடக்கிய சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

முதல்வர் பழனிசாமி: தமிழகமக்கள் அனைவருக்கும் இதயம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நல்வாழ்வுக்காக ஜெயலலிதாவின் அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்டங்களை அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு, வளமும் வலிமையும் மிக்க தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம். தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இப்புத்தாண்டு அனைவர்வாழ்விலும் நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பொன்னாண்டாக அமையட்டும். எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய பெருமையோடும், எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர்வழியில் அதிமுக மீண்டும் ஆட்சிஅமைக்க வழிசெய்யும் ஆண்டாக 2021 மலர்கிறது எனும் மகிழ்வோடும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி:

அதிமுக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய பெருமையோடு, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க வழிசெய்யும் ஆண்டாக 2021 மலர்கிறது என்றமகிழ்ச்சியோடு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

கடந்த கால இருள் நீங்கும். கதிரொளி பரவும். மக்களின் கவலைகளைத் துடைத்திடவல்ல, காக்கும்கரங்களைக் கொண்ட நல்லாட்சி தமிழகத்தில் மலரும். தமிழக மக்களுக்கு விடிவு தரும் வாழ்வு புலரும்என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை உளமாற வரவேற்கிறேன்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ;-

துளிர்க்கும் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நல்ல ஆரோக்கியமும், நம்பிக்கையும், அன்பும், மகிழ்ச்சியும், பெருகட்டும். சமத்துவமும், நல்லிணக்கமும், ஓங்கி வளமான செழிப்பான ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டுகிறேன். அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

தமிழகத்தில் அரசியல் மாற்றமும், நல்லாட்சி மலர்ந்திடவும், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அந்தவகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுதமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

2020-ம் ஆண்டின் துயரங்கள் அனைத்தையும் துரத்தி அடிப்போம். அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

நாம் இழந்த சந்தோஷங்களையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுப்போம். புத்தாண்டில் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதன்மூலம் வளமான தமிழகம் மீண்டும் அமைய தொடர்ந்து பாடுபடுவோம்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்:

முடியப்போகும் 2020-ம் ஆண்டில் ஒரு பக்கம் கரோனாவுக்கு எதிரான புரட்சி. இன்னொரு பக்கம்இந்திய வயல்வெளிகளில் எப்போதுமில்லாத பசுமைப் புரட்சி. 2020-ம்ஆண்டு ஒரு வழியாக முடியப் போகிறது. ஆனால் தொற்று முழுமையாகமுடியவில்லை. என்றாலும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் தொடர்ந்து இயங்கியது நம் விவசாயத் துறை மட்டுமே!

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

நவீன இந்தியாவை கட்டமைக்க, ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை 2020-ம் ஆண்டின் வாழ்க்கை அனுபவம் உணர்த்துகிறது. மாநில அதிகாரத்தில் தொடரும் சுயநலக் கும்பலை வெளியேற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் மாபெரும் வெற்றி பெறும் ஆண்டாக 2021 வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:

சோசலிசமே மக்களை அனைத்து துன்பங்களில் இருந் தும் பாதுகாக்க முடியும் என்பதை மீண்டும் உரத்துச் சொல்லி 2020 ஆண்டு விடை பெற்றிருக்கிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்:

எந்த தீய சக்திகளையும் தலையெடுக்கவிடாமல் செய்து, மக்களுக்கு பாதுகாப்பான நல்வாழ்வை உறுதி செய்திடவும், வேளாண்மையும், தொழில்களுக்கு செழித்திடவும், உழைக்கின்ற அனைவரும் உயர்வைப் பெற்றிடவும் ஏற்ற நல்ல சூழல் உருவாகட்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

மக்களின் வாழ்வாதாரம் வளமாகி, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நிலைநாட்டும் நம்பிக்கை ஒளிபாய்ச்சும் பகுத்தறிவு ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காங்கிரஸ் எம்பி. சு.திருநாவுக்கரசர், பாமக இளைஞர் அணிதலைவர் அன்புமணி, சமக தலைவர்சரத்குமார், பெரம்பலூர் எம்பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், கோகுல்மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர்யாதவ், தமிழ்நாடு முஸ்லீம் லீக்தலைவர் விஎம்எஸ். முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநிலப் பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது,கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *