FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு

நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறையை அமல்படுத்துவதை பிப்ரவரி 15ம் தேதிக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒத்திவைத்துள்ளது.

டெல்லி, டிச-31

சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் மூலம், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் கால நேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும். வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.

இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அண்மையில் ஓர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதாவது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என அறிவித்தது.

ஆனால் 70 சதவீத வாகனங்கள் மட்டுமே பாஸ்டேக்கை பயன்படுத்தி வருவதாகவும் தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் இருப்பதாகவும் எனவே காலநீட்டிப்பு அவசியம் என்றும் வாகன உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஸ்டாக் முறையை அமல்படுத்துவதை பிப்ரவரி 15-ந்தேதி வரை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே பிப்ரவரி 15-ந் தேதி வரை ‘பாஸ்டேக்’ இல்லாமலும் சுங்கச்சாவடிகளில் பயணிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *