ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டையாக நீடிக்க வேண்டும்… கொட்டும் மழையில் கர்ஜித்த ஈ.பி.எஸ்.,

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து மீண்டும் அம்மாவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சி, டிச-31

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி ஸ்ரீரங்கம். அவர் மறைந்தாலும் அவர் செய்த சாதனைகளால் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. அவர் முதல்வராக இந்தத் தொகுதி உறுதுணையாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொகுதியில் முதல்வராக நான் நின்று பேச வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

ரூ.100 கோடியில் கொள்ளிடம் புதிய பாலம், திருவானைக்காவல் மேம்பாலம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தோட்டக்கலைக் கல்லூரி, ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் தங்குவதற்காக யாத்திரி நிவாஸ், குடிசை மாற்று வாரியம் மூலம் 400 வீடுகள், ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உட்பட ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா செயல்படுத்தினார்.

முக்கொம்பில் உடைந்த கொள்ளிடம் கதவணைக்குப் பதிலாக புதிய கதவணை கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 3, 4 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார் ஜெயலலிதா. தற்போது அந்த ஆலையை ரூ.2,000 கோடியில் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்ததி வருகிறது.

வளமான, செழிப்பான, அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைந்த பகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கித் தந்தார்.

மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டுமெனில் சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை வேண்டும்.

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டையாக நீடிக்க இரட்டை இலை சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக அரசுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி பக்கபலமாக இருக்கும் வகையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *