திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, டிச-31

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். மேலும் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். ஜனவரி 2ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 9 ,திண்டிவனம் (விழுப்புரம் ) 7, செஞ்சி , மரக்காணம் (விழுப்புரம்) தலா 6, ஆடுதுறை (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு), விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 5, ராமேஸ்வரம் , கடலூர், பாண்டிச்சேரி தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 31, ஜனவரி 01 குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.