தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்னர் முதல்வர் யார் என முடிவு.. பாஜக அறிவிப்பால் அதிமுக ஷாக்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்னர் முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும் என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, டிச-30

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இதனை வெளிப்படையாக அறிவிக்காததால் சர்ச்சை உருவானது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக, பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மையைப் பொருத்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்றும் சி.டி.ரவி கூறினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, இந்த முறை எப்படியும் சட்டமன்றத்திற்குள் கால்பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜக குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி கட்சியான பாஜக எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜ தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவியும் அதே கருத்தை கூறியிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *