திமுகவின் பேச்சுரிமையை எத்தனை வழக்குகள் போட்டாலும் தடுக்க முடியாது.. நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டாலின் கருத்து

என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பேன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-30

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு நிகழ்வுகளில் அவதூறாகப் பேசியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு 6 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்குகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்குகள் விசாரணைக்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 29ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், “இன்று ‘எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான’ சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக அரசு தொடர்ந்த ஆறு அவதூறு வழக்குகளில் ஆஜரானேன். சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அதிமுக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சியின் தவறுகளை, ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சில பத்திரிகைகள் ஆளும் கட்சியின் தவறுகளை எழுதுகின்றன. சில பத்திரிகைகள் எழுதுவதில்லை. ஆகவே, பிரதான எதிர்க்கட்சியாக திமுக விமர்சனம் செய்கிறது. இதுமாதிரி அவதூறு வழக்குகள் போட்டு திமுகவின் ஜனநாயகக் கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது. திமுகவின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் பழனிசாமியால் தடுக்க முடியாது.

என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். அதிமுகவின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *