அரியானா அரியணையில் மீண்டும் கட்டார்…

அரியானா, அக்டோபர்-26

அரியானா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக சட்டமன்ற தலைவராக இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மனோகர் லால் கட்டார் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.

மேலும், துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்கிடையே, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 5 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

திடீர் திருப்பமாக 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார்.

ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதலா

பேச்சுவார்த்தையில் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும், அவரது கட்சியை சேர்ந்த சிலருக்கு அமைச்சரவையில் இடம் தருவது, உள்ளூர் வேலைவாய்ப்பில் 75% சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, பா.ஜ.க தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை ஆளுநரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பை வழங்குவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், சண்டிகரில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனோகர் லால் கட்டார் சட்டமன்ற பாஜக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். நாளை அவர் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *