நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம்..! தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ராசிபுரம், டிச-29

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.

இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று 2-வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

இன்று காலை ராசிபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது;-

நாமக்கல் மாவட்டம் மிக ராசியான மாவட்டம். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் அதிமுக பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடுக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ரூ.2,500 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. நாமக்கல் மாவட்டம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *