24 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணி…
திருச்சி, அக்டோபர்-26
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்கும் பணியில் மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பல்வேறு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது.

கிணற்றில் விழுந்தபோது சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை, மீட்பு பணியின்போது 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் மீட்புப் பணி கடும் சவாலாக உள்ளது. குழந்தையை மீட்கும் அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால், குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. குழந்தை அசைவற்று கிடப்பதால் அனைவரும் பதைபதைப்புடன் உள்ளனர்.

21 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நீடிக்கும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில மீட்பு படையினரின் அதிநவீன உபகரணங்களுடன் குழந்தையை மீட்கும் பணி நடைபெறுகிறது. குழந்தை சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.