அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை நிறுத்துங்கள்.. மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை, டிச-28

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும்” என 19.12.2020 அன்று முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்த போது அறிவித்தார். அரசாணையில் “ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பேச்சு, செய்திக் குறிப்பு அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டு – இந்தத் தேதி அறிவிக்கப்பட்டாலும் – இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அடுத்தடுத்து குழப்பங்களைச் செய்து – தேர்தலை மனதில் வைத்து, இது ஏதோ அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசு போல் காட்டிக் கொள்ள முதலமைச்சர் முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டைத் தாக்கி ஏறக்குறைய ஓராண்டு ஆகப் போகின்ற நேரத்தில் – அந்த கொரோனாவைக் காட்டி, “2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார். கொரோனா, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காலம் கடந்து இப்போது 2500 ரூபாய் “பொங்கல் பரிசாவது” கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், ஜனவரி 4-ஆம் தேதி முதல் பணம் வழங்குவது துவங்கப்படும் என்று அரசு ஆணையை வெளியிட்டுவிட்டு- டிசம்பர் 21-ஆம் தேதியே தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்து, சில பயனாளிகளுக்கு 2500 ரூபாயை வழங்கினார். தேர்தலை எண்ணி அவ்வளவு அவசரம் அவருக்கு. இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான “டோக்கன் விநியோகம்” செய்ய வைக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினரை வைத்து எப்படி வழங்கச் சொல்கிறார் முதலமைச்சர்? அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அ.தி.மு.க.வினர் ஏன் கையாள வேண்டும்?

ஆகவே அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும் என்றும்; அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க.வினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *