இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் சேவை.. டெல்லியில் மோடி துவக்கி வைத்தார்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரெயில் இயக்கத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைத் தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி, டிச-28

மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டிரைவர் இல்லாத ரெயில் இயக்கத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை நோக்கி இந்தியா எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை இந்த விழா காட்டுகிறது என்றார்.

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும்.

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் பிரத்தியேகமாக இந்த அட்டையை உருவாக்கியுள்ளது. இந்த அட்டை மூலம் பஸ் பயண கட்டணம், பிற மார்க்கங்களில் பயணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ளலாம். வாகன நிறுத்துமிட கட்டணம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளலாம்.

ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டரில் இருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தை தீர்மானித்து இயக்கவுள்ளனர்.

கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 7ம் எண் வழித்தடத்தில் முதற்கட்டமாக இந்த சேவை துவங்கப்படும் என்றும், இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பின் பிற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் டெல்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *