தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை.. முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, டிச-28

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக மாவட்டங்களின் எல்லைகளை வரையறை செய்யும் பணியானது நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று இன்றைய தினம் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகியிருக்கிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். நிர்வாக ரீதியாக இன்று முதல் 38வது மாவட்டமாக உதயமாகியிருக்கக்கூடிய மயிலாடுதுறை தன்னுடைய பணிகளை தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த மாவட்டத்திற்கான ஆட்சியர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மயிலாடுதுறை பகுதி பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கனவு நனவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *