தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான்… முதல்வர் ஈ.பி.எஸ். பேச்சு
தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான், நாளை நீங்களும் முதல்வர் ஆகலாம் என சென்னையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை, டிச-27

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அ.தி.மு.க. தான். மேடையில் அமர்ந்து இருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, சாமானியர்கள். எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. அவர்களுக்கு நாம்தான் வாரிசு. அதிமுகவையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான். நாளை நீங்களும் முதல்வராகலாம். நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு. புயல் காலத்தில் புயலைவிட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுத்தோம். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
மழைநீர் தேங்காமல் இருக்க சென்னை மேயராக இருந்தபோது எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் செய்தது என்ன?
அடுத்த ஆண்டு 11 மருத்துவ கல்லூரிகள் மூலம் 1,650 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்க உள்ளன. உயர்கல்வி படிப்போரின் சதவீதத்தை 49 சதவீதமாக உயர்த்தியது அதிமுக அரசு தான். இந்தியாவில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம். நீர் மேலாண்மை திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில உள்ளது. சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள 4 ஏரிகளும் நிரம்பி உள்ளன.
சீர்மிகு சென்னை திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள் 3000-லிருந்து 19-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.