2023-க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடு.. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, டிச-27

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் கடந்த வாரம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு முதலில் துணை முதல்வர் மரியாதை செலுத்தினார், அதை தொடர்ந்து முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது;-
தமிழ்நாட்டின் அரசியல், நேற்று இன்று நாளை என எப்போதுமே புரட்சி தலைவர் எம்ஜிஆரை சுற்றியே சுழலும். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் தொண்டனாக இருப்பதே பெருமை. மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுத்து, அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர பல்வேறு நலத்திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. பல சோதனை, வேதனைகளை தாண்டி, அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் புரட்சி தலைவி அம்மா. மாநில வருவாய் நிதியில் 60% ஏழை மக்களின் பயன்பாட்டிற்கு செலவிட்டவர் ஜெயலலிதா. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதனை செய்து கொடுப்பது அதிமுக அரசு. அம்மாவின் கனவை நனவாக்கும் விதமாக, 2023க்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். எத்தனை இயற்கை சீற்றங்களாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்றது அதிமுக அரசு. பெண்கள் நாட்டின் கண்கள் என கருதிய புரட்சி தலைவி ஜெயலலிதா, பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு.
தமிழகத்திற்கு பல்வேறு நல்லதிட்டங்களை செய்து தருவதால் மத்திய ஆதரிக்கிறோம்.
இவ்வாறு ஓ.பி.எஸ். கூறினார்.