திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்.. தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

காரைக்கால், டிச-27

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். பின்னர் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று அதிகாலை 5.22 மணிக்கு அதிகாலை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டது. சனி பகவானை தரிசனம் செய்ய கடும் குளிரிலும் இரவில் இருந்தே பக்தர்கள் கோயிலில் குவிய துவங்கினர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் முதலில் மூலவரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளியுள்ள உற்சவரையும் வணங்கி விட்டு வெளியே வந்தனர்.

வழக்கமாக சனிப்பெயர்ச்சி நாளன்று நளன் மற்றும் பிரம்ம தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். ஆனால் இன்று குளங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

விழாவில் 27-வது குருமகா தேசிக சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், புதுவை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *