கோவை வெள்ளமடை ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் S.P.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை, டிச-27

தமிழகம் முழுவதும் 2,200 அம்மா மினி கிளினிக்குகளில், முதற்கட்டமாக 600 கிளிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மினி கிளினிக்களை தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏழு மினி கிளினிக்குகளும், புறநகர் பகுதிகளில் 27 மினி கிளினிக்குகள் என மாவட்டத்தில் முதற்கட்டமாக மொத்தம் 30 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளமடை ஊராட்சியில் பொது சுகாதாரம் & நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இதேபோல், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பொது சுகாதாரம் & நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
