திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை, டிச-26

உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அப்போது, சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம், ஆன்லைன் முன் பதிவை கட்டாயமாக்கியுள்ளது.
திருநள்ளாறு விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதின்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என உத்தரவிட்டது. மேலும், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.