கருணாநிதியின் எல்லா திறமைகளும் மு.க.அழகிரியிடம் தான் உள்ளது.. செல்லூர் ராஜூ கருத்தால் சர்ச்சை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மொத்த திறமைகளும் மு.க அழகிரியிடம் தான் உள்ளது என்றும் அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை, டிச-26

திமுகவின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்து பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க அழகிரி நீண்ட மௌனத்திற்குப் பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கட்சி தொடங்க போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என காத்திருந்த நிலையில், இதுவரை அவருக்கு அழைப்பு ஏதும் இல்லாததால் அவர் தனி கட்சி துவங்க முடிவு செய்துள்ளதாகவும், அல்லது அவர் ரஜினியுடன் இணைந்து செயல்படபோகிறார் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரும் இதுகுறித்து வாய்த்திறக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படையாகவே கட்சி தொடங்குவது குறித்தான தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 3-ந் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த போவதாகவும், ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்களை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.ஆதரவாளர்கள் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தினால் நிச்சயம் தொடங்குவேன் என்றும், ரஜினியை விரைவில் கண்டிப்பாக சந்தித்து பேசுவேன் என்றும், தி.மு.க.வில் மீண்டும் சேரும்படி இதுவரை அழைப்பும் இல்லை என்ற அவர் இனி தி.மு.க.வில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அழகிரியின் இந்த கருத்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அழகிரி கட்சி ஆரம்பித்தாலோ அல்லது ரஜினிக்கு ஆதரவு அளித்தாலோ, அது திமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூவினிடத்தில் அழகிரி கட்சி துவங்க உள்ளது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது, அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது: முக அழகிரியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். எப்போதும் அவர், தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாத நிலைபாடு உடையவர். எதைச் செய்தாலும் முறையாக திட்டங்களை வகுத்து அதை நேர்த்தியாக செயல்படுத்துவார். கருணாநிதியினுடைய அனைத்து திறமைகளும் அண்ணன் அழகிரியிடம்தான் உள்ளது. எதிர்க்கட்சிகளை வளர விடக்கூடாது என்பதில் கலைஞரை போலவே அவர் செயல்படுவார். அழகிரியிடம் ஒருகாலத்தில் ரவுடிகளாக இருந்தவர்கள் எல்லோரும் இப்போது திமுகவுக்கு சென்றுள்ளனர். மொத்தத்தில் அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத காரியம். அழகிரி கட்சி ஆரம்பித்தால் அது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *