இன்று சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம்..!
சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சென்னை, டிச-26

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.
இந்தியாவில் சுனாமியின் தாக்கம் வெகுவாகவே எதிரொலித்தது. இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது. சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க இயலாது.
குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன. நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர். ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த சுனாமி பேரலையால் தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த கொடிய நிகழ்வு நடந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
கடலூர் துறைமுகத்தில் இன்று மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமியில் கடலூரில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கன்னியாகுமரியில் உள்ள மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறைத்துயில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மரக்காணம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.