திரைக்கவர்ச்சியை வைத்து நாட்டை ஆளணுமா?.. ரஜினி, கமல், விஜய்க்கு சீமான் வார்னிங்

சென்னை, டிச-26

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், “விஜய் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக விஜய் ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்களே” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சீமான், “கோபமாக இருந்தால் என்ன ஆகிவிடும்? என் தம்பிகள்தான் அவர்கள். அவர்கள் அரசியல்படுத்தப்படவில்லை. ஒரு நடிகர் நடிப்பதாலேயே நாடாள தகுதி வந்துவிடுகிறது என்பதை நான் ஏற்கவில்லை. எங்களுடைய கோட்பாடு ஏற்கவில்லை. தியாகங்களை திரைக் கவர்ச்சியில் மூடுவதை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆரை நாங்கள் தொடாமல் பயணித்தது ஏன் என உங்களுக்குத் தெரியும். அவருக்கு முன்பாக, காமராஜர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். நல்லக்கண்ணு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவர்களை விட்டுவிட்டு, எம்ஜிஆர் வரணும், ரஜினி வரணும்னா வெறுப்பாகுமா, ஆகாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “தொடக்க காலத்தில் இருந்து தம்பி விஜய்யை எந்த அளவுக்கு தற்காத்து நின்ற அண்ணன் நான் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் மேல எனக்குப் பேரன்பு உண்டு. குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவது அவர் குரல் கொடுக்க வேண்டும். அவர் புகழ் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக நிற்க வேண்டும். அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வந்து அரசியல் செய்யுங்கள். களத்தில் நின்று மக்களுக்காகப் போராடி, நன்மதிப்பைப் பெற்று வரட்டும். வெறும் திரைக்கவர்ச்சியை வைத்து நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்கிறேன். அதை விஜய்க்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்” என்றார்.

நாம் தமிழர் கட்சி மக்களுக்காக நிற்கிறது என்றபோதும் மக்கள் நிராகரித்து விட்டார்களே, உள்ளாட்சித் தேர்தலில்கூட போதுமான இடங்கள் கிடைக்கவில்லையே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “இது பைத்தியக்காரத்தனமான கேள்வி. 12 விழுக்காடு வாக்குகளை மக்கள் செலுத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்களை வென்றிருக்கிறோம். எளிய மக்கள் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். நான் இந்த வேலையைச் செய்வதில் மன நிறைவு அடைகிறேன். என்னை அங்கீகரி, அங்கீகரிக்காமல் போ.. அதில் என்ன இருக்கிறது? நான் பிறந்த கடனைச் செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *