நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.. அப்பல்லோ நிர்வாகம்

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத், டிச-25

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமாக உள்ளார். அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார். ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *