வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து..ஜனாதிபதியிடம் வழங்கினார் ராகுல் காந்தி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி 2 கோடி விவசாயிகளிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி நேற்று வழங்கினார்.

டெல்லி, டிச-25

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை ஐந்து கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளபோதும், தீா்வு எதுவும் எட்டப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை என்று கூறி வந்த விவசாயிகள், இப்போது மத்திய அரசு திறந்த மனதுடன் உறுதியான திட்டத்துடன் முன்வந்தால் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று கூறியுள்ளனா்.

இந்த நிலையில், ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி ஆகியோா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினா்.
அப்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட தீா்மானத்தையும் குடியரசுத் தலைவரிடம் அவா்கள் சமப்பித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகள் விரோத சட்டங்கள் என்பதை குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவதையே பாா்க்க முடிகிறது. இந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எனவே, மத்திய அரசு கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டி, இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு இந்த சட்டங்களை பிரதமா் மோடி திரும்பப்பெற வில்லை எனில், நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தாமலே, நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்கள் அவசியம் திரும்பப்பெறப்பட வேண்டும். மேலும், பிரதமா் மோடியிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க எவா் முயற்சித்தாலும், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனா். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்த இருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. அது வெறும் கற்பனையான விஷயமாக மட்டுமே உள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *