மூப்பனார் பெயர் அழிப்பு.. உதயநிதி காரை வழிமறித்த தமாகாவினர்..!

அரியலூரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை தமாகாவினர் வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர், டிச-241

அரியலூர் மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.24) ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருமானூர் பேருந்து நிலையம் அருகே ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடையில் உதயநிதி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, அந்த அரங்க மேடையைச் சீரமைப்பதற்காக, ஒன்றியக்குழு தலைவர் நிதியிலிருந்து சுண்ணாம்பு பூசும் பணிகள் நடைபெற்று வந்தன. சுண்ணாம்பு பூசும் பணிகளின்போது, இன்று (டிச.24) அரங்க மேடையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் பெயர் அழிந்துவிட்டது.

இதனைக் கண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், உதயநிதி வருகைக்காகத்தான் ஜி.கே.மூப்பனாரின் பெயரை அழித்ததாகக் கூறி ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், அரியலூரில் பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், மதியம் 2 மணியளவில் திருமானூருக்கு வருகை புரிந்தார்.

அப்போது, திருச்சி சாலையில் அவரது வாகனத்தை மறித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவரணி மாநிலத் துணைத்தலைவர் மனோஜ், அக்கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினரும் திமுகவினரும் அவர்களைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *