தேர்தலில் 3வது முறையாக மகத்தான வெற்றி பெற்றுவோம்.. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி

மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம் என, எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை, டிச-24

அதிமுகவின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும், எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழியையும் ஏற்றனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

அந்த உறுதிமொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அதிமுக ஏழைகளைக் காக்கின்ற இரும்புக் கோட்டை. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை, நமக்குத் தந்த எம்ஜிஆரின் புகழை எந்நாளும் காப்போம்.

எம்ஜிஆர், இந்தத் தமிழ் மண்ணை தாயாக நினைத்தார்; தமிழ் மொழியை உயிராக நினைத்தார்; தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தார். அவரது நினைவுகளை இதயத்தில் வைத்து, கட்சிப் பணி ஆற்றுவோம்.

ஊழலை ஒழித்திட்ட தர்ம தேவன்; பசிப்பிணி தீர்த்து வைத்த வள்ளல்; பார் புகழ நாடாண்ட எம்ஜிஆர் வழி நடப்போம்.

எம்ஜிஆர், பெரியாரின், மறுமலர்ச்சிக் கொள்கைகளை மனதிலே சுமந்து, அண்ணாவின் லட்சியக் கனவுகளை நனவாக்க, நல்லாட்சி நடத்தி, மக்களுக்கு மகிழ்ச்சி தந்தார்; அரவணைத்து, அன்பு காட்டி, தொண்டர்களுக்கு உயர்வும் தந்தார். எம்ஜிஆரின் புனிதப் பாதையிலே, நாமும் நடப்போம். அதிமுகவை இமயம்போல் உயர்த்திடுவோம்.

தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்று, ஜனநாயகம் காப்பாற்றப்பட, புதிய எழுச்சி தந்தவர், எம்ஜிஆர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம்.

மக்களின் வாழ்வு வளம்பெற, வசனத்திலே புரட்சி, நடிப்பிலே புரட்சி, அரசியலில் புரட்சி என்று புரட்சியின் வடிவமானார் எம்ஜிஆர். அவர் காட்டிய புரட்சி வழியை நாமும் தொடர்வோம். மக்களுக்கு தொண்டாற்றுவோம்.

ஏழை எளியோருக்காக திட்டங்கள்; சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்காக திட்டங்கள்; பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள்; உழைக்கும் தொழிலாளர்களுக்காகத் திட்டங்கள்; விவசாயிகளுக்காக விதவிதமான திட்டங்கள்; நெசவாளர்களுக்காக திட்டங்கள்; மீனவர்களுக்காக திட்டங்கள்; மாணவர்களுக்காக திட்டங்கள் என்று, திட்டங்கள் போட்டவர் எம்ஜிஆர். அந்தத் திட்டங்கள் தொடர வேண்டும்; அதை நிறைவேற்ற அதிமுக ஆட்சியும் தொடர வேண்டும். அதற்கென உழைப்போம்.

தமிழ்நாட்டில் உயரப் பறப்பது, அதிமுகவின் கொடியாகத் தான் இருக்க வேண்டும். தமிழக மக்களைக் காக்க, நீடித்து நிலைத்து நிற்பது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியாகத் தான் இருக்க வேண்டும். அதற்காக நம்மை அர்ப்பணிப்போம் என்று, உறுதி ஏற்கிறோம்.

தீய சக்திகளை அழித்துக் காட்டியவர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா; கண்ணுக்கெட்டிய தூரம் வரை, நமக்கு எதிரிகளே இல்லை. அதை செய்து காட்டியவர் ஜெயலலிதா. எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை நிலைக்கச் செய்தவர் ஜெயலலிதா. கொடி பிடிக்கும் தொண்டனையும், கோட்டைக்கு அனுப்பியவர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா. நம் இருபெரும் தலைவர்கள் நிகழ்த்திய சாதனைகளை எல்லாம், தொடர்ந்து நாமும் செய்வோம். இதில் ஒருபோதும் தவற மாட்டோம் என்று, உறுதி ஏற்கிறோம்.

எம்ஜிஆரை தெய்வமாக நினைக்கும் விசுவாசத் தொண்டர்களின் வீரத்திற்கு முன்னால், ஜெயலலிதாவை உயிராக நேசிக்கும் விசுவாசத் தொண்டர்களின் விவேகத்திற்கு முன்னால், எதிரிகள் எவர் வந்தாலும், அந்தத் தீய சக்திகளின் திட்டங்கள் பலிக்காது. அதிமுகவின் வெற்றி என்பது மட்டுமே நமது லட்சியமாக இருக்கும் என்று, உறுதி ஏற்கிறோம்.

எம்ஜிஆர், தமிழக அரசியல் வரலாற்றில், தொடர்ந்து மூன்று முறை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று, வரலாற்றுச் சாதனை படைத்தவர். அவர் மக்களோடு வாழ்ந்தார்; மக்களுக்காக வாழ்ந்தார். அவர் வழியிலே, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று வாழ்ந்தார் ஜெயலலிதா. அதனால் தான், அந்த மனித தெய்வங்களுக்கு மக்கள் மகுடம் சூட்டினார்கள். அந்தப் புகழ் மகுடத்தை எதிரிகள் எவரும் தட்டிப் பறிக்க முடியாது; தட்டிப் பறிக்க, விசுவாசத் தொண்டர்கள் விடமாட்டோம் என்று, உறுதி ஏற்கிறோம்.

எம்ஜிஆர் செய்த சாதனையைப் போல, அவருடைய விசுவாசத் தொண்டர்களாகிய நாம்தான், தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம். மக்கள் ஆதரவு நமக்கே இருக்கிறது. எம்ஜிஆரின் ஆசி நமக்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆன்மா நமக்கு துணை நிற்கிறது. என்றும் வெற்றி; எதிலும் வெற்றி என்று முழங்கிடுவோம். அதற்காகவே உழைத்திடுவோம் என்று, உறுதி ஏற்கிறோம்.

வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாகிய அதிமுக தொண்டர்கள், சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம். சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம். சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம். எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என, மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம்.

இருள் இல்லாத தமிழ்நாடு; பசி இல்லாத தமிழ்நாடு; எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி; தொடர்ந்து ஜெயலலிதாவின் நல்லாட்சி; விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி; மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் ஜெயலலிதாவின் ஆட்சி, மீண்டும் மலர ஒற்றுமையுடன் உளமார பாடுபடுவோம். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு பாடுபடுவோம். எம்ஜிஆர் கற்றுத் தந்த பணிவு நம்மோடு இருக்கிறது; ஜெயலலிதா கற்றுத் தந்த துணிவும் நம்மோடு இருக்கிறது. அந்தப் பணிவோடும், துணிவோடும், 2021-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை, நிகழ்த்திக் காட்டுவோம் வீர சபதம் ஏற்கிறோம். சரித்திரம் படைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்”.

இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *