அஜாக்கிரதை, அலட்சியம் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள்- நடிகர் விவேக்
சென்னை, அக்டோபர்-26
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் குழந்தையை மீட்கும் பல்வேறு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், 70 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்கும் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. 16 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நீடிக்கிறது. சுர்ஜித் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை, அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கடும் தண்டனை மட்டுமே தீர்வு” என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அபாயகரமான ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக பலர் தங்கள் வேதனையையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர்.
