கூட்டணிக்கு பாமக ரூ.1000 கோடி கேட்கும்.. சீண்டிய தயாநிதி.. கெடு விதித்த பாமக

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க 1000 கோடி ரூபாய் வரை பாமக பேரம் பேசுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க திமுக எம்.பி. தயாநிதிமாறனுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், டிச-24

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்றது. இதில், திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக கூட்டணிக்கு பாமக வருமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு தயாநிதி மாறன், கடந்த தேர்தலின்போது அதிமுகவிடம் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பாமக அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது. ஒருவேளை பாமக, திமுக கூட்டணிக்கு வருவதாக இருந்தால் இப்போது 500 கோடி, 1,000 கோடி ரூபாய் கேட்பார்கள். அவர்களுக்கும் பணம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கும் அளவுக்கு திமுகவிடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்றார்.

தயாநிதி மாறன் சொன்ன இந்தக் கருத்து, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ பாமக கொந்தளித்தது. அதன்பின் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கட்சி பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி கறுப்பு கொடி காட்டினர். அத்துடன் தயாநிதி மாறன் கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு உண்டானது. இதனையடுத்து, காவல் துறை, திமுகவினரின் பாதுகாப்புடன் ரயில் நிலையத்துக்குச் சென்ற தயாநிதி மாறன் அங்கிருந்து சென்னை சென்றார்.

இந்நிலையில், ராமதாஸ் குறித்து அவதூறாக பேசியதற்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தயாநிதி மாறனுக்கு ஜி.கே. மணி சார்பில் வழக்கறிஞர் பாலு நோட்டீஸ் அனுப்பினார். அதில், பாமக பற்றியும் அதன் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் அவதூறு பரப்பும் நோக்குடன் பொய்யான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிட்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *