வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசியில் கேட்டால் தெரிவிக்காதீர்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை
ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை திரும்ப செலுத்த பயணிகளிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கமாட்டோம் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை, டிச-23

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளின் செல்லிடப்பேசியை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ரயில் டிக்கெட்டுக்கானத் தொகையை வரவு வைக்க வங்கிக் கணக்கு விவரங்களைக் கோருவதாக சில புகார்கள் வந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்தில், ரயில் பயணிகள் கவனத்துக்கு, இந்திய ரயில்வே, ஐஆர்சிடிசி அல்லது அதன் ஊழியர்கள் யாருமே, தனிநபர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது கிரெடிட் அல்லது டெபிட் அட்டை எண்களையோ, அந்த அட்டையின் முடியும் தேதி, ஓடிபி, ஏடிஎம் பின், சிவிவி எண் அல்லது பான் எண், பிறந்த தேதி என எதையும் கேட்க மாட்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்து, அந்த டிக்கெட்டை ரத்து செய்தால், எந்த வங்கிக் கணக்கில் இருந்து டிக்கெட்டுக்கு பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக் கணக்குக்கு அபராதம் கழிக்கப்பட்டு மீதித் தொகை தானாகவே வரவு வைக்கப்பட்டுவிடும்.
அதேவேளையில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுத்து அதனை ரத்து செய்திருந்தால், உரிய காலத்துக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, ரயில்வேயில் இருந்து அழைப்பதாகக் கூறி வங்கிக் கணக்கைக் கேட்டால் 138 என்ற உதவி எண்ணைத் தொடர்ந்து கொண்டு உதவிகளைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.