அதிமுகவில் இணைந்தது இந்த காரணத்துக்குதான்.. கல்யாணசுந்தரம் பேட்டி

சென்னை, டிச-23

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலகிய, அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவந்த அவர், அ.தி.மு.கவில் இணைந்தது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது. இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் அவர் சந்தித்தார் .

”தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சி தொடரவே அ.தி.மு.கவில் நான் இணைந்தேன்” என்றவரிடம், பத்திரிகையாளர் முன்வைத்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,

”தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில், 13 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி, உங்களுக்கு நல்லாட்சியா?”

”ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்குச் சரியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. விசாரணைக் கமிஷனும் விசாரித்து வருகிறது. பெருந்துறையில் விவசாயிகளை கருணாநிதி அரசு சுட்டுக் கொன்றது. ஆனால், அதுகுறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. விசாரித்து நீதி வழங்க மறுத்தால்தான் அது அரச பயங்கரவாதம். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்ட பிறகு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.”

”காங்கிரஸ் இனத்துக்கு எதிரி, பா.ஜ.க மனித குலத்துக்கு எதிரி எனப் பேசிவந்த நீங்கள் இன்று, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.கவில் இணைந்துள்ளீர்களே?”

”பா.ஜ.க-வால் தமிழகததுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை முதல்வர் நிச்சயம் தடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 7.5 விழுக்காடு மருத்துவ உள் இட ஒதுக்கீடு விவாகரத்தில் ஆளுநரை எதிர்பார்க்காமல் முதல்வர் அரசாணை பிறப்பித்ததைப் போல, தமிழக நலன் சார்ந்த விஷயங்களை அ.தி.மு.க விட்டுக்கொடுக்காது என நம்புகிறேன்”

” விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுச் செயல்பட்ட நீங்கள், அவரைத் தூக்கில் போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்துள்ளீர்களே?”

”அதே ஜெயலலிதாதான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, அந்த அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், 2009-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க ஏன் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. ஏன், ஈழத்தில் இனப்படுகொலை செய்தது காங்கிரஸ் என வைகோ இப்போதும் நாடாளுமன்ற வளாகத்தில் பேசுகிறார். ஆனால், இப்போதும் கூட தி.மு.க அப்படிச் சொல்லவில்லையே. அதனால், ஜெயலலிதாவின் புலிகள் குறித்த நிலைப்பாட்டை கால வரிசையில் பார்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு”

”கடந்த காலத்தில், ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி எனக் கடுமையாக விமர்சித்த உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?”

” நீதிமன்றத் தீர்ப்பை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது. அப்படியென்றால் நானும் பல நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்து இங்கே பேசமுடியும். ஆனால், நான் தற்போது அவற்றைப் பற்றிப் பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். ஜெ வழக்கில் அ.தி.மு.க அடிப்படை உறுப்பினராக எனது பார்வை வேறானது.”

”தமிழ்த்தேசியம்தான் உங்களின் கொள்கை எனச் சொல்லிப் பயணித்த நீங்கள் தற்போது மீண்டும் திராவிட இயக்கத்தில் இணைந்திருப்பது பின்னடைவுதானே?”

”தமிழ்தேசியத்துக்கான அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்துகிறது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து அ.தி.மு.க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இன்றும் அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலையை ஆதரித்தே வருகிறது. பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு க்கு பரோல் வழங்கியது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க-வை வலிமைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.”

”சீமானை நம்பிப் பயணிக்கும் தம்பிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?”

”சீமானை நம்பிப் பயணிப்பவர்களுக்கு நான் சொல்லுவது சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள் என்பதே”

”சீமானுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது?”

”நான் அறிவுரை சொல்லி கேட்கும் நிலையில் அண்ணன் சீமான் இல்லை.”

”நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த அழுத்தம், மிரட்டல்கள் காரணமாகத்தான் நீங்கள் அ.தி.மு.கவில் இணைந்திருப்பதாக உங்கள் நண்பர் குகன்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?”

” என் நண்பராக அவர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். எனக்கு அப்படி எந்த அழுத்தமும் வரவில்லை.”

”வெளிநாடுகளில் இருந்து சீமானுக்கு வரும் நிதி, உங்களுக்குக் கைமாறியதால்தான் உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

”அயல் நாடுகளில் இருந்து நான் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடு ரோட்டில் நின்று தீக்குளிக்கவும் நான் தயார்”

இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *