சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுதலை

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை காவல்துறை கைது செய்து பின்பு ஜாமீனில் விடுவித்துள்ளது.

மும்பை, டிச-22

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னாவை இன்று அதிகாலை மும்பை காவல்துறை கைது செய்தது. மும்பை விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் கிளப்பில் ரெய்னாவைக் கைது செய்த காவலர்கள், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி தனியார் கிளப் இயங்கியதாலும் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததாலும் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கிளப்பில் இருந்த சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சுசானே கான், பாடகர் குரு ரந்தாவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டார்கள். பிறகு ரெய்னா, சுசானே ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *