மீண்டும் எடப்பாடியார்தான் முதல்வர்..! அமைச்சர் S.P.வேலுமணி உறுதி
”கொரோனா காலத்திலும், மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை சரி செய்யும் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வராவார்” என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
சென்னை, டிச-22

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை, ஷெனாய் நகரில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி பின்வருமாறு:-
கொரோனா தொற்றை குறைக்க, சிறப்பாக பணியாற்றி வரும், அனைத்து அரசு பணியாளர்கள், துாய்மை பணியாளர்களுக்கு நன்றி. உள்ளாட்சி துறை அதிகாரிகளின் சிறந்த உழைப்புக்கு பரிசாக, உள்ளாட்சித்துறை, 140 விருதுகளை பெற்றுள்ளது.குடிநீர் திட்ட பணிகளை பொறுத்தவரை, ஒன்பது ஆண்டுகளில், 9,000த்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள், தற்போது வேகம் அடைந்துள்ளன. மேலும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றுக்கு, சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்குள்ளான, 26 லட்சம் மக்களுக்கு, மாநகராட்சி சார்பில், மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, மழை நீர் சேகரிப்பில், தமிழகம் சாதனை படைத்து உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், குடிநீர் இருப்பு தேவையான அளவில் உள்ளது. இதனால், தட்டுப்பாடு ஏற்படாத வகையில், சென்னையில் குடிநீர் வினியோகிக்கப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், பொதுமக்கள் வசதிக்காக, 2.77 லட்சம், ‘அம்மா இருசக்கர வாகனங்கள்’ வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்திலும், தன்னை பற்றி கவலைப் படாமல், முதல்வர் இ.பி.எஸ்., மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, சரி செய்கிறார். எனவே, அவர் மீண்டும் ஆட்சியை பிடித்து முதல்வராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.