ஆழிப் பேரலை கோரத் தாண்டவத்தின் 56வது ஆண்டு தினம்.. அழிந்து போன துறைமுக நகரம் தனுஷ்கோடி..!

இது தமிழக வரலாற்றில் ஓர் கருப்பு நாள்.

சிறந்த துறைமுக நகரம், யாத்திரை தலம் என பல்வேறு பெருமைகள் மிக்க நகரம்தான் தனு‌‌ஷ்கோடி. இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட நகரமே தனு‌‌ஷ்கோடி.

இவ்வாறு வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தனு‌‌ஷ்கோடியில் 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி நேர்ந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் பலருக்கு நெஞ்சு பதறும். சோகம் தாங்காமல் கண்ணீர் வழிந்தோடும்.

ஆம்…. டிசம்பர் 23-ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் கொந்தளிப்பால் தனு‌‌ஷ்கோடி நகரமே அழிந்தது.

கடும் மழைக்கு மத்தியில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்த மீனவர்களும், மற்றவர்களும் தங்களை விழுங்க சீறி வந்த ஆழிப்பேரலையை பற்றி அறிந்திருக்கவில்லை. நள்ளிரவில் தங்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களையும் ஆழி பேரலை தனக்கு இரையாக்கி கொண்டது. அத்துடன் தனது ஆக்ரோ‌‌ஷத்தை நிறுத்தாமல் தொடர் மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் என தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருந்தன.

கடலானது தனு‌‌ஷ்கோடி நகரத்தையே மூழ்கடித்துவிட்டது. 24-ந் தேதி காலையில் பார்த்தபோது தனு‌‌ஷ்கோடி பகுதியில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா என இரண்டு கடலும் ஒன்று சேர்ந்தது போல் காட்சி அளித்தது. இன்ப சுற்றுலாவாக ரெயிலில் தனு‌‌ஷ்கோடிக்கு வந்த 120 மாணவர்கள் பயணித்த ரெயில் தடம் புரண்டது. ரெயிலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கி பலியாகினர். கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை காவு வாங்கியதுடன், கட்டிடங்களையும் நிர்மூலமாக்கிவிட்டது. சேதமடைந்த கட்டிடங்களாக தனு‌‌ஷ்கோடியே சின்னாபின்னமாகி கிடந்தது.

வர்த்தக நகரம் என்று அழைக்கப்பட்ட தனு‌‌ஷ்கோடி ஒரே நாள் இரவில் அழிந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

புயலில் சேதமான நிலையில் இன்று வரையிலும் ஆலய அமைப்போடு காட்சி அளித்து வரும் பவளப்பாறை கற்களால் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம்

இந்த துயர சம்பவம் நடந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. 56 ஆண்டுகளை கடந்தும் இன்றும் மின்சாரம், மருத்துவ வசதி என எந்தவொரு வசதியும் இன்றி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அழிந்து போன தனு‌‌ஷ்கோடி பகுதி அதன் பின்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு பொது மக்கள் தங்குவதற்கும் அரசு தடை விதித்தது. இன்று வரையிலும் தனு‌‌ஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன் பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசை வீடுகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளிலும் மீன் பிடிக்க சென்று வந்து அங்கு குடும்பத்தோடு வாழ்ந்துதான் வருகின்றனர்.

56 ஆண்டுகள் ஆனாலும் அழிந்து போன தனு‌‌ஷ்கோடியை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு கட்டிட சிதிலங்கள் அந்த சோக சம்பவத்தை நினைவுகூரும் வகையில் காட்சியளித்து வருகின்றன.

தனுஷ்கோடியின் அடையாளமான சர்ச், விநாயகர் கோயில், இடிந்த கட்டடங்களை ரூ.3 கோடி செலவில் ஒலி, ஒளி காட்சியமைத்து புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் திட்ட மதிப்பீடு செய்தும் அதனை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.மேலும் சர்ச், விநாயகர் கோயிலில் உள்ள சுண்ணாம்பு கல், பவள பாறைகளை சுற்றுலா பயணிகள் பெயர்த்தெடுத்து செல்வதால் கட்டடங்கள் பலவீனமாகியுள்ளது. சமீபத்தில் வீசிய சூறாவளியில் சர்ச்சின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் மீதமுள்ள கட்டடங்களை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தனுஷ்கோடி வரலாறு முற்றிலும் அழிந்து போகும் அபாயம் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *