குழந்தை சுர்ஜித்தை உறுதியாக மீட்போம்-அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி, அக்டோபர்-26

ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை சுர்ஜித் நலமாக இருக்கிறான். குழந்தையின் சித்தப்பா, தந்தை உள்ளிட்டோரை வைத்து பேசி குழந்தையை ஆறுதல் படுத்தி வருகிறோம். பிரேத்யக கருவி மூலம் மிகவும் நுட்பமான முறையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல், சேலம், கோவை, மதுரை என பல இடங்களில் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை வெற்றிகரமாக மீட்ட தனிநபர்களும், தனியார் குழுக்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் கிடைக்கவும், மண் மூடிவிடாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தையை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *