இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதிக்க முடியாது.. பிரசாத் ஸ்டுடியோ

இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, டிச-21

இசையமைப்பாளா் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஓா் அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக் கூடமாகப் பயன்படுத்தி வந்தாா். இந்நிலையில், அந்த இடத்தை பிற பணிகளுக்குப் பயன்படுத்த கடந்த 2019-ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் முடிவு செய்தது. இதனால், இளையராஜா ஒலிப்பதிவுக் கூடத்தை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் வலியுறுத்தியது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், ‘திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நான் இசையமைத்த பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் கடந்த சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ‘இளையராஜா ஒலிப்பதிவுக் கூடமாகப் பயன்படுத்திய அந்த இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் வேறு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அவா் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தாா். எனினும், தியானம் செய்ய அனுமதிப்பது தொடா்பாக ஸ்டுடியோ உரிமையாளா்களிடம் கேட்டுத் தெரிவிப்பதாகக் கூறினாா்.

இந்நிலையில் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *