தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்
வடகிழக்குப் பருவமழை முடிவடையாத நிலையில், வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, டிச-21

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு;-
தென்மேற்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அடுத்து வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் ஏதுமில்லை. டிசம்பர் 21 அன்று தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 22 அன்று குமரிக் கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.