பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் விஜய் என்ன ஆலோசித்தார் தெரியுமா?
விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, டிச-21

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீடு கடந்த இரு நாள்களாக பரபரப்பாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை அழைத்து அங்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.
கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இயங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் அறிவிப்பை ஜனவரி 31ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி பரபரப்பைக் கிளப்பினார். விஜய் அதற்கு மறுப்பு தெரிவிக்க சர்ச்சையாகி சில நாள்களில் கட்சியே கலைக்கப்பட்டது.
இந்த சூழலில் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார். முதலில் நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்தார்.
சட்டசபை தேர்தலில் ரஜினிக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என டெல்லியிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் விஜய் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோரது கட்சிகள்ள் எப்படி இயங்குகின்றன, சட்டமன்றத் தேர்தலில் நம் பங்கு என்ன என்று நிர்வாகிகளிடம் கேள்விகள் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.