ரூ.2000-க்கு ஆசைப்பட்டால் கார் டயரில் விழுபவர்தான் அரசியல்வாதியாக வருவார்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் 2,000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று பா.ஜ.க அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை, டிச-21

வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், பொது மக்களிடம் அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2,000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல். மோடி அரசியல் வேறு. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 6,000 ரூபாய் கொடுக்கிறோம். ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கை தரத்தை முன்னேற வைத்துள்ளோம்.
நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கவில்லை எனில், தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், கார் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள், ஒரு நாளுக்கு 4 முறை வெள்ளை சட்டை மாற்றுபவர்கள் தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள். தேர்தல் நேரத்தில் புதிது, புதிதாக கட்சிகள் வருகின்றனர். அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் களத்துக்கு வருவார்கள்.
சீமான் என்று ஒருவர் முளைத்திருக்கிறார். அவர் ஆமைக்கறி சாப்பிடுவதில் தான் எக்ஸ்பர்ட். அவர் வேறு எது சொன்னாலும் நம்பாதீர்கள். அதேபோல கமல்ஹாசன் போன்றவர்களையும் மக்கள் நம்பக் கூடாது. காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நம்பக் கூடாது. அங்கு தொண்டர்களை விட தலைவர்கள் தான் அதிகம். காசு கொடுத்துத்தான் கூட்டத்தை அழைத்து வருகின்றனர். இந்தியாவின் சாபக்கேடு காங்கிரஸ்தான்.
2021 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகவும் பாசம் கொண்டவர். தமிழகத்துக்கு வந்தால், அவர் வேட்டிதான் கட்டுவார். உலகம் முழுவதும் தமிழைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார். மோடிக்கு நமது அன்பை திருப்பிக் காட்ட வேண்டும்.
தி.மு.க எம்.பி-கள் டெல்லிக்கு, இலவசமாக விமானத்தில் சென்று நாடாளுமன்ற கேன்டீனில் நன்கு சாப்பிடுகின்றனர். பிறகு போட்டி போட்டு தூங்குகின்றனர். இங்கு வந்து, ‘மோடி சரியில்லை’ என்று பேசுகின்றனர். தி.மு.க எம்.பி-களுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். 2,000 ரூபாய்க்காக, ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்துவிடாதீர்கள். பா.ஜ.க கட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம்.
நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நம்ம கட்சியிடம் இல்லாத பணம் இல்லை. ஆனால், நாங்கள் நேர்மையான வழியில் அதை விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறோம். நீங்கள் விலை மதிப்பில்லாதவர்கள். உங்களை விலை கொடுத்து வாங்க முடியாது” என்றார்.