பொங்கல் பரிசு ரூ.2500.. எடப்பாடி அதிரடி அறிவிப்பு
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி, டிச-19

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார். பின்னர் எடப்பாடியில் உள்ள பல இடங்களுக்கு மினி வேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பாளி என்ற இடத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதுதவிர ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்தார். பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும். துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.