கேரள உள்ளாட்சித் தேர்தல்.. ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்..

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர், ஒரு ஓட்டு கூட பெறாதது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம், டிச-19

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டமாக கடந்த வாரம் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 16-ம் தேதி எண்ணப்பட்டன. இதன் முடிவில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு கூட பெறாமால் தோல்வியடைந்துள்ளார்.

கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியை சேர்ந்த காரட் ஃபைசல் என்பவர் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி அளிக்கவில்லை. மேலும், காரட் ஃபைசலுக்கு பதிலாக வேறொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை அந்த வார்டில் நிறுத்தியது. இதனால், ஆத்திரம் அடைந்த காரட் ஃபைசல் கொடுவள்ளியில் உள்ள 15-ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.

ஆனால், தேர்தல் முடிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட காரட் ஃபைசல் அமோக வெற்றி பெற்றார். இதில், வேதனையான விஷயம் என்னவென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே, வேட்பாளர் வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்துள்ளது. வேட்பாளர் ஓட்டும் மாற்று கட்சிக்கு பதிவானது கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சுயேச்சையாக நின்றாலும் காரட் ஃபைசலுக்கு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மறைமுகமாக ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே அவர் வெற்றி பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தோல்வி குறித்து தனது வேட்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசாரணை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *