கர்தார்பூர் வழித்தடம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் ஒப்பந்தம்
கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
டெல்லி.அக்டோபர்.25
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடம் அமைந்துள்ள குருத்வாரா உள்ளது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டன.
நீண்ட இழுபறிக்கு பின், இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தாஸ் தலைமையிலான உயர்நிலைக் குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தலைமையிலான உயர்நிலைக் குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதைத்தொடர்ந்து கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. 5 ஆண்டுகள் வரை இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்.
காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் எதிரெதிர் துருவத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.