வேடப்பட்டி, கைகோளபாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்குகள்.. அமைச்சர் S.P.வேலுமணி திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர், டிச-19

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேடப்பட்டி பேருராட்சியில், ‘அம்மா மினி கிளினிக்’ என்ற, மருத்துவ சேவை மையத்தை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அதன்பின், 25 கர்ப்பிணிகளுக்கு, அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், “தமிழகத்தில், அனைத்து மக்களும் மருத்துவ வசதி பெற வேண்டும் என்று, மருத்துவ நிலையங்கள் இல்லாத கிராமங்களை தேர்ந்தெடுத்து, 2,000 ‘அம்மா மினி கிளினிக்’ துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும், 70 அம்மா மினி கிளினிக் துவங்கப்படுகிறது. இதில், 5 நடமாடும் மினி கிளினிக் உள்ளது,” என்றார்.

இதேபோல், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி கைகோளபாளையம் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராஜாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கோவை மாநகராட்சி சார்பில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.92.95 லட்சம் மதிப்பில் மக்கும் கழிவுகள் சேகரிக்கும் 13 வாகனங்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.35.75 லட்சம் மதிப்பில் மக்காத கழிவுகள் சேகரிக்கும் 5 வாகனங்கள் என 18 வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த 18 வாகனங்கள் மற்றும் கட்டிடக் கழிவுகளை சேகரிக்கும் வாகனம் ஆகியவற்றின் பயன்பாட்டை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *