கமிஷனுக்காகவே முதல்வர் பதவியைப் பயன்படுத்தும் எடப்பாடி.. பொன்முடி விளாசல்

கமிஷனுக்காகவே முதல்வர் பதவியைப் பயன்படுத்தும் பழனிசாமிக்கு திமுகவையோ, அதன் தலைவரையோ விமர்சிக்கத் தகுதியில்லை; நாவடக்கம் தேவை என, திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-19

இது தொடர்பாக, க.பொன்முடி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றி வரும் திமுகவைப் பார்த்து ‘சுயநலக் கட்சி’ என்று நாவில் நரம்பு இல்லாமல் முதல்வர் பழனிசாமி பேசியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஒரு ஊழல் கட்சி. பதவியிலிருக்கும் போதே ஜெயிலுக்குப் போன முதல்வரைக் கொண்ட கட்சி. பதவியில் இருக்கும் போதே சிபிஐ விசாரணையைச் சந்திக்கும் முதல்வர் பழனிசாமியைக் கொண்ட கட்சி. ஏன் பதவியிலிருக்கும் போதே கோட்டையில் வருமான வரித்துறை சோதனை நடத்திய முதல்வர் உள்ள ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி.

ஆகவே சிபிஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு இரண்டையும் வைத்துக் கொண்டுள்ள முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கொண்ட அதிமுக கட்சியை நடத்திக் கொண்டு திமுகவை ‘சுயநலக் கட்சி’ என்று கூற முதல்வர் பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?

பொதுப்பணிக்கும் பொதுநலத்திற்கும் முதல்வர் பழனிசாமிக்கும் சம்பந்தமில்லை. அவரது அமைச்சர்களுக்கும் தொடர்பில்லை. பத்தாண்டுக் காலம் கஜானாவைச் சுரண்டியதும், கமிஷன் அடித்ததும், ஒரு துறை விடாமல் ஊழல் செய்து கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததும் மட்டும்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரின் கீழ் உள்ள அதிமுக அமைச்சர்களும் செய்த ஒரே ‘மக்கள் பணி’.

கோடி கோடியாகச் செலவழித்து அரசு பணத்தில் விளம்பரம், ஜெயலலிதா என்ற நினைப்பில் காவல்துறை பாதுகாப்பு, ஓரிடத்திற்குச் சென்றாலே பல மணி நேரம் மக்களைச் சாலையில் நிற்க வைப்பது என்பது, முதல்வராக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் பழனிசாமி போடும் ஆட்டம்தானே தவிர, சாதாரண பழனிசாமிக்காக இதெல்லாம் நடப்பதில்லை.

எனவே, ஆடம்பரத்தின் உச்சத்தில், அதிகாரத் திமிரின் ஆணவத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமி, நான் சாதாரண பழனிசாமி என்று வேடம் போட வேண்டாம்.

முதல்வர் பதவியில் அமர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டிய பழனிசாமி, தினமும் ஒரு டெண்டர், நாளும் ஒரு கமிஷன் என்று நடமாடிக் கொண்டிருப்பதைத் தமிழக மக்கள் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் தனது குடும்பத்தின் மூலம்தான் கட்சியை நடத்துகிறார். ஆட்சியின் நிர்வாகத்தை நடத்துகிறார். இது இன்றைக்குத் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையிலும், நெடுஞ்சாலைத்துறையிலும் ஒப்பந்தம் எடுக்கும் அனைத்து கான்டிராக்டர்களுக்கும் தெரியும். ஏன் காவல்துறையில் முக்கிய போஸ்டிங் வாங்கும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பதவி இருக்கிறது என்பதற்காக, ‘தன் குடும்பம் வாழ வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்’ என்று வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் முதல்வர். அவர் ஏதோ கரோனா பணி செய்து, நோய்த் தொற்றைத் தடுத்து விட்டதாகக் கதை அளந்திருக்கிறார்.

திமுக தலைவர் இன்றைக்குத் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், கரோனா காலத்தில் முதலில் வீதிக்கு வந்து பணியாற்றியவர். மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை வழங்கியவர். பலரின் பட்டினிச் சாவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தவர்.

அப்போது எல்லாம் முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். நோயில் சிக்கிக் கொள்வோம் என்று வெளியே வரவே பயந்தார்கள். ஆனால், அந்த நேரத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சியை நடத்தி, தமிழக மக்களுக்குப் பணியாற்றியவர் திமுக தலைவர்.

அப்போதெல்லாம், ‘தொற்று நோய் இருக்கின்ற நேரத்தில் இப்படி வெளியே போய் நோயைப் பரப்பலாமா’ என்று குதர்க்கமாகப் பேசியவர் இதே எடப்பாடி பழனிசாமிதான். கரோனா காலத்தில் மக்கள் பணியாற்றியவர்கள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள். அதனால் கரோனாவுக்கு முதல் பலி கொடுத்ததும் திமுக, ஆம். எங்கள் முன்களத் தளபதிகளில் ஒருவரான சென்னை தி.நகர் அன்பழகனை இழந்தோம். அப்போது அதையும் குறை கூறி திமுக தலைவரை விமர்ச்சித்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

திமுக தலைவர் கட்சி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸில் பேசுகிறார். ஆனால், மக்களிடம் வீதி வீதியாகச் சென்று உதவி செய்கிறார். சென்னை மாநகரம் முழுவதும் பல சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் போயிருக்கிறார். கடலூர், நாகபட்டினம், திருவாரூர் என்று நிவர் புயல் பாதித்த மாவட்டங்களுக்குப் போயிருக்கிறார். திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருமே இப்படி பம்பரமாக பணியாற்றியிருக்கிறார்கள்.

ஆனால், ‘கரோனா கட்டுப்பாடு’ என்று வைத்துக் கொண்டு அரசு பாதுகாப்புடன், அரசு வாகனத்தில் பத்திரமாக மாவட்டம் மாவட்டமாக முதல்வர் சென்றதும், ஒரு சில அதிமுக அமைச்சர்கள் சென்றதும் எதற்காக? முதல்வர் கட்சிப் பிரச்சாரம் செய்தார். அரசு விழாக்களில் எதிர்க்கட்சிகளை வசைபாடினார். அமைச்சர்கள் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிக்கு உறுப்பினர் சேர்த்தார்கள். அல்லது அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

முதல்வரோ, அமைச்சர்களோ மக்கள் பணியாற்றவோ, கரோனாவை கட்டுப்படுத்தவோ மாவட்டங்களுக்குப் போகவில்லை. அந்தந்த மாவட்டங்களில் டெண்டர், கமிஷன் போக்குவரத்துக்களை முறைப்படி கண்காணிக்கவே மாவட்டங்களுக்குச் சென்றார்கள். இல்லையென்று முதல்வராலும், அமைச்சர்களாலும் மறுக்க முடியுமா?. முதல்வர் ஆய்வு செய்ததால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கரோனா குறைந்ததா? அதன்பிறகுதான் அதிகரித்தது.

இப்போது, இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு இயற்கையாகக் குறைகிறது. அப்படித்தான் தமிழகத்திலும் குறையத் தொடங்கியது. இதற்கும் முதல்வர் பழனிசாமியின் ஆய்வுக்கும் தொடர்பில்லை. அவர் நடத்திய ஆய்வு பக்காவான அரசியல். அதனால்தான் திமுகவினரும், மற்ற கட்சியினரும் வெளியே போகக்கூடாது என்று கரோனாவைக் காட்டி தடுத்தார். ஏன் வழக்குகளே பதிவு செய்தவரும் முதல்வர் பழனிசாமி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

கரோனாவில் பணியாற்றிய முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் கதை 7,500 கோடி ரூபாய் செலவிட்டதைப் பார்க்கும் போது நிச்சயம் வெளியே வரும். அப்போது முதல்வரும், அமைச்சர்களும் கரோனாவைப் பயன்படுத்தி பேரிடர் நிதியில் நடத்திய திருவிளையாடல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அதில் சந்தேகமில்லை.

எனவே, இந்த மாநிலத்தைப் பத்தாண்டுகள் பாழ்படுத்தியது அதிமுக ஆட்சி. இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கெடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி. தொழிற்சாலைகள் தமிழகத்திற்கே வராமல் விரட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி. பேரிடர்களில் எல்லாம் கொள்ளையடித்த ஆட்சி அதிமுக ஆட்சி. ஒரு துறை விடாமல் டெண்டரில் ஊழல், கான்டிராக்டில் கமிஷன் என்று இடதும் வலதுமாக வாங்கிக்கொண்டிருக்கும் ஊழல் அமைச்சர்களைக் கொண்டது அதிமுக ஆட்சி.

இந்த ஆட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும், எந்த நேரத்திலும் நெடுஞ்சாலைத்துறை ஊழலில் சிபிஐ விசாரணையைச் சந்திக்க வேண்டியதிருக்கும், முதல்வர் பழனிசாமி சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம்.

ஊழல் சாக்கடையில் மிதந்து, நீந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் திமுக பற்றிப் பேச பழனிசாமிக்கு துளியும் தகுதியில்லை! மக்கள் பணியாற்றும் திமுக தலைவரை விமர்சிக்கும் முன்பு, கமிஷனுக்காகவே முதல்வர் பதவியைப் பயன்படுத்தும் பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *